கணியம் பொறுப்பாசிரியர்
வீடியோ எப்போது?

‘உங்க பைத்தான் கட்டுரை அருமையாக இருக்காமே. வீடியோ ஏதாவது தறீங்களா? நித்யாவையும் GenAI வீடியோ போட சொல்றீங்களா?’

என்று நேற்று ஒருவர் கேட்டார்.

‘ஏங்க. இப்போதான் முதல் கட்டுரையே எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டீங்களா?’

‘இல்லீங்க. அதுக்கெல்லாம் நம்மால முடியாதுங்களே?’

‘ஐயோ. உங்களுக்கு படிக்கத் தெரியாதா?’

‘அட. காலேஜ் படிச்சிருக்கேன். ஆனா இதையெல்லாம் படிக்க எனக்கு வராதுங்க. தமிழ் படிப்பது கஸ்டம்.’

‘ஓ. அப்படியா? இந்தாங்க. ஆங்கிலப் புத்தகம் . A byte of Python – python.swaroopch.com/‘

‘அட, எனக்கு படிப்பதே ரொம்ப கஸ்டம்.
நான் ரொம்ப பிஸி. படிக்க எல்லாம் எனக்கு நேரம் இல்லை.
ஏதாவது வீடியோ கொடுத்தால், அப்படியே போனிலேயே பார்த்து விடுவேன்.
சின்னச் சின்னதா ரீல்ஸ் போட்டீங்கன்னா, நல்லா பாத்து இன்னும் சீக்கிரமா கத்துப்பேன்.’

‘அப்படியா? நல்லதுங்க. உங்கள் திறமை எல்லோருக்கும் இருந்தால், அனைவரும் programmer புலி ஆகி விடலாம். உங்களுக்கான பதிலை கட்டுரையில் எழுதுவேன்.’

‘அதையும் ஒரு வீடியோவா போடுங்க.’

‘படிப்பது ரொம்ப முக்கியம். அதை தவிர்த்துவிட்டு புரோகிராமர் ஆக முடியாதுங்க’

‘அங்க என்ன சத்தம்?’ என்று நித்யா குரல் கொடுத்தார். ‘சும்மா, பேசிக்கிட்டு இருந்தேன்மா. இதோ வரேன்’

‘மேலிடம் அழைக்கிறது. பிறகு பேசுகிறேன்’ என்று சொல்லி, தப்பி விட்டேன்.

இந்த பைத்தான் பாடங்களை காணொளியாகப் பகிர முடியுமா என்று சிலர் கேட்டுள்ளனர். இப்போதைக்கு நான் காணொளி தரப்போவதில்லை.

Programming கற்க மிகவும் எளிய சிறந்த சுருக்கு வழி ‘படிப்பது’ தான். பார்ப்பது அல்ல.

உங்களுக்கு வீடியோ பார்க்கத்தான் பிடிக்கும். படிப்பது பிடிக்காது என்றால், உங்களால் Programmer ஆக முடியாது.
அல்லது
நீங்கள் ஏற்கெனவே நல்ல programmer தான்.
– நிரல்மொழி

PlainText க்கும் உங்களுக்கும் உள்ள தூரம் தான், Programming க்கும் உங்களுக்கும் உள்ள தூரம்.

PlainText ஐப் படிப்பது மூலமே, நமது அறிவைப் பெருக்க முடியும். தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது. அது போலவே தான் படிப்பது மூளைக்கு.

நமது மூளையானது, நாம் வேலை வாங்குவதைப் பொறுத்து, அற்புதங்களை செய்ய வல்லது. அதைப்போய் புத்தம் புது பாத்திரம் போல, பயன்படுத்தாமல் மூடி வைத்து விட்டு, நாம் முன்னேறாமல் போவது விதி, கடவுள் திருவிளையாடல், முன்வினைப்பயன், எல்லாம் அவன் செயல், ஜாதகத்தில் குறை என்று ஜல்லியடிப்பதில் பயனில்லை.

Programming திறமையானது உங்களுக்கு நல்ல வேலை பெற்றுத் தரும்.
உங்கள் வாழ்நாளில் பல கோடி ரூபாய்கள் ஈட்டித்தரும்.
ஒரு நல்ல வேலை உங்கள் தலைமுறையையே உயர்த்தும்.
அதற்கான மூளை உழைப்பை தருவதன் மூலம் மட்டுமே இவை எல்லாம் சாத்தியம் ஆகும்.

PlainText படிப்பதும் எழுதுவதுமே அதற்கான முதல் படி.

Text காண்போர் code கற்று உயர்வு காண்பார்.
சுகமாக காணொளி மட்டுமே காண்போர்,
கனவு மட்டுமே காண்பார்.

Programming என்பது PlainText ஐ படிப்பது, எழுதுவது. ( நிரல் வடிவில் ). Error Log படிப்பது, தேடுவது, ஆவணங்கள்/புத்தகங்கள் படிப்பது, கேள்விகள் கேட்பது, பதில்கள் படிப்பது/தருவது, notes எழுதுவது, வலைப்பதிவு எழுதுவது ஆகியவற்றை செய்வது மட்டுமே.

வீடியோ பார்ப்பது, Shorts/Reels பார்ப்பது மூலம் மட்டுமே Programming கற்க நினைப்போர், காதலியை/காதலனை தூர இருந்தே பார்த்து மகிழும் இதயம் முரளி வகையினரே.

ஆயினும் ‘பார்த்தாலே பரவசம்’ என்போருக்காகவே யுடீயுபில் பல்லாயிரம் காணொளிகள் உள்ளன. கண்டு மகிழுங்கள். பல மணிநேரம் காணொளி பார்த்த நிறைவு கிட்டும். ‘நீச்சல் அடிப்பது எப்படி’ என்று கூட வீடியோ பார்த்தே கற்கும் பலே கில்லாடி நீங்கள்தான் எனில், உங்களுக்கு என் வணக்கங்கள்.

‘வீடியோ பார்த்த சில மணி நேரங்களிலேயே, பார்த்தது மறந்து போய்விடுகிறது’ என்று வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறீர்கள் என்றால், வீடியோவை நிறுத்தி விட்டு படிக்கத் தொடங்குங்கள். உங்கள் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும்.

பலரும் பல இணைய வகுப்புகள், காணொளி பாடங்கள் பார்த்திருப்போம். ஆனாலும் ‘இந்த புரோகிராமிங் மட்டும் வரவே மாட்டாங்குது’ என்று புலம்பியிருப்போம். அதற்குக் காரணம் அதில் நமது மூளை உழைப்பு ஏதுமில்லை. உழைப்பு இல்லாத இடத்தில் முன்னேற்றம் இல்லை.

காணொளிகள் என்றுமே சிறுவர்கள் சைக்கிள் ஓட்டப் பழகும் போது இணைத்து விடும் “Balancing Wheels” போலத்தான். அவற்றை கழட்டி விட்ட பின்புதான் அவர்கள் சைக்கிள் ஓட்டவே தொடங்குவர்.

பத்து மணி நேரம் வீடியோ பார்ப்பதை விட, பத்து பக்கம் படிப்பது நல்லது. பத்து வரி நிரல் எழுதுவது மிக நல்லது.

ஓரளவு programming கற்று பல நிரல்கள் எழுதிப் பழகிய பின், காணொளி காணலாம். ஒன்றும் சிக்கல் இல்லை. ஆனால் Text ஐ விடாதீர்கள். ‘உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே! ‘ என்று PlainText உடன் இனிதே வாழுங்கள்.

சரி. படிக்கத் தொடங்குவோம் வாருங்கள்.

பைத்தான் நிறுவுதல்

இந்த நூலில் ‘பைத்தான் 3’ என்று கூறும் இடங்களில் எல்லாம் ‘பைத்தான் 3 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்புகள் என்று கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

விண்டோசு கணினியில் நிறுவுதல்

இந்த இணைப்புக்கு செல்க. www.python.org/downloads/
பைத்தான் புதிய பதிப்பைக் கண்டு, அதை பதிவிறக்கம் செய்க.

இந்த நூலை எழுதும் போது பைதான் 3.12 என்ற பதிப்பு கிடைத்தது. உங்களுக்கு இதை விட மேம்பட்ட பதிப்பு கிடைக்கலாம்.

உங்கள் கணினி விண்டோசு விஸ்டா க்கு முந்தையது எனில் பைத்தான் 3.4 ஐ தெரிவு செய்க.download Python 3.4 only புது பைத்தானுக்கு, புது விண்டோசுதான் தேவையாம். என்னவோ போடா மாதவா!

நிறுவுதல் என்பது, பிற மென்பொருட்களை விண்டோசு கணினியில் நிறுவுதல் போன்றதே. ஆம். அதே ‘Next, Agree, Next…’ தான்.

எச்சரிக்கை – நிறுவும் போது Add Python.exe to PATH என்று ஒரு பெட்டி இருக்கும். சின்னதாகத்தான் இருக்கும். அதை மறக்காமல் கிளிக் செய்து விடுங்கள். பெட்டியில் டிக் போட்டாச்சா என்று ஒன்றுக்கு பலமுறை சோதிக்கவும். இதை மறந்தால் எல்லாம் போச்சு.

பைத்தான் நிறுவப்படும் இடத்தை மாற்ற, Customize installation, தெரிவு செய்க. பிறகு Next பிறகு C:\python312 அல்லது உங்களுக்கு உகந்த ஒரு Folder இடத்தை உள்ளிடுக.

`Add Python.exe to PATH`

இதை முன்பே தெரிவு செய்யவில்லை என்றால், இப்போது செய்யலாம். இந்த Add Python to environment variables பெட்டிக்கு ஒரு டிக் போட்டு விடுங்கள். முன்னர் காட்டிய அதே Add Python.exe to PATH தான் இதுவும்.

install Launcher என்பதையும் தெரிவு செய்க. இது ஒரே கணினியில் பல பைத்தான் பதிப்புகள் நிறுவப்பட்டிருந்தால், தேவையானதை Start Menu மூலம் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

ஒருவேளை, Add Python.exe to Path அல்லது Add Python to environment variables தெரிவு செய்யப்படவில்லை என்றால், பைத்தான் இயக்க முடியாது. “‘python’ is not recognized as an internal or external command” என்ற பிழைச்செய்தி கிடைக்கும். அப்போது, (DOS Prompt) என்ற பகுதியில் உள்ளபடி செய்யுங்கள். Running Python prompt on Windows பகுதியிலும் காண்க. அல்லது மீண்டும் ஒருமுறை நிறுவி விடுங்கள்.

Docker பற்றிய அறிமுகம் உள்ளவர்கள் இங்கே பாருங்கள், Python in Docker இதையும் Docker on Windows பாருங்கள். இப்போதைக்கு அவசியம் இல்லை.

DOS Prompt

மேலதிக விவரங்களுக்கு www.pythoncentral.io/add-python-to-path-python-is-not-recognized-as-an-internal-or-external-command/

விண்டோசு கணினியில், DOS prompt எனப்படும் command line ல் பைத்தான் செயல்பட வேண்டுமெனில், PATH variable என்பதை சரி செய்ய வேண்டும்.

Windows 2000, XP, 2003 கணினிகளில் , Control Panel -> System -> Advanced -> Environment Variables பகுதிக்கு செல்க. System Variables பகுதியில் உள்ள, PATH ஐ தெரிவு செய்க. பிறகு Edit தெரிவு செய்க. ;C:\Python312 என்பதை அங்கே எழுதுங்கள். ஏற்கெனவே சில தகவ்வல்கள் அங்கே இருக்கும். அவற்றுக்குப் பின்னர் இதை சேருங்கள். இருப்பதை நீக்கி விடாதீர்கள். அவையும் மிக முக்கியம். (அந்த கோப்புறை, அதாங்க folder, ஏற்கெனவே இருக்கிறதா என்று பாருங்கள். அல்லது நீங்கள் எங்கே பைத்தான் நிறுவினீர்களோ, அந்த கோப்புறையின் முழு இடப்பெயர் தருக. உங்களிடம் வேறு பைத்தான் பதிப்பு இருந்தால், இந்தப் இடமும் மாறுபடும். அதைக் கண்டுபிடித்து, சரியான இடத்தை இங்கே நிரப்புக)

பழைய விண்டோசு பதிப்புகளில், C:\AUTOEXEC.BAT என்ற கோப்பு (file) திறக்கவும். அதில் PATH=%PATH%;C:\Python312 என்ற வரியை சேருங்கள். பின் கணினியை அணைத்து மீண்டும் எழுப்புங்கள். கட்டி அணைக்க வேண்டாம். restart செய்யுங்கள். Windows NT கணினியில் இதையே, AUTOEXEC.NT கோப்பில் எழுதி, அணைத்து, எழுப்புங்கள்.

Windows Vista கணினியில்

Start -> Control Panel

System என்பதை தெரிவு செய்க. வலது புறத்தில், “View basic information about your computer” என்பதைக் காணலாம்.

இடது புறத்தில் Advanced system settings ஐத் தொடுங்கள்.
System Properties -> Advanced பெட்டியில் Environment Variables என்று அடியில் வலதுபுறம் இருக்கும்.

System Variables என்ற பெட்டியில் ‘Path’ என்பதைக் கண்டுபிடித்து Edit பட்டனை அழுத்துக.

தேவையான folder ன் முழுப்பெயரை சேருங்கள்.

கணினியை அணைத்து மீண்டும் எழுப்புங்கள்.

விண்டோசு 7 , 8:

டெஸ்க்டாப்பில் உள்ள Computer ஐ வலது கிளிக் செய்து, Properties தெரிவு செய்க. அல்லது Start -> Control Panel -> System and Security -> System -> Advanced system settings -> Advanced. இதில் System variablesக்கு கீழே Environment Variables தெரிவு செய்க. PATH -> Edit.

இதில் கடைசிக்கு சென்று;C:\Python312 அல்லது தேவையான கோப்புறை பெயர் தருக.

ஏற்கெனவே இருந்தது %SystemRoot%\system32; எனில் இப்போது %SystemRoot%\system32;C:\Python312 என்று இருக்க வேண்டும்.

OK கிளிக் செய்க. கணினியை மீள்துவக்கம் செய்க.

விண்டோசு 10:

Start Menu > Settings > About > System Info > Advanced System Settings > Environment Variables -> Path -> Edit > New > (இங்கே தேவையான கோப்புறை பெயர் எழுதுக. உதாரணம். C:\Python312\)

உஷ்…… இனிமேல் விண்டோசுதான் மிக எளிது, User Friendly, பிளா, பிளா…. என்று யாரும் என்னிடம் சொல்லிக் கொண்டு வராதீர்கள்.

விண்டோசில் பைத்தானை இயக்குதல்

விண்டோசில் டெர்மினல் அல்லது cmd / command prompt மூலம் பைத்தானை இயக்கலாம். அதற்கு start button-> Run செல்க. அதில் cmd என்று எழுதி [enter] தருக.

இப்போது தெரியும் ஒரு கருப்புப் பெட்டியில், python என்று எழுதி [enter] தருக. பிழைச்செய்தி ஏதும் இருக்கிறதா என்று பார்க்கவும்.

மேக் கணினியில் பைத்தான் நிறுவுதல்

Mac OS X பயனர்கள், Homebrew: brew install python3 என்ற கட்டளை மூலம் பைத்தான் நிறுவலாம். Terminal என்று எழுதி [enter] அழுத்துக. கருப்புத் திரை திறக்கும். இதுதான் பைத்தான் இயங்கும் மாயத்திரை. இங்கு python3 என்று எழுதி [enter] அழுத்துக. பிழை ஏதும் உள்ளதா என்று காண்க.

குனு/லினக்சு கணினிகளில் பைத்தான் நிறுவுதல்

நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். ஏற்கெனவே உங்கள் குனு/லினக்சு கணினியில் பைத்தான் நிறுவப்பட்டிருக்கும். பைத்தான் இல்லாமல் குனு/லினக்சு கிடையாது.

இருந்தாலும், உபுண்டு, டெபியன் கணினிகளில் பைத்தான் 3 நிறுவ, உங்கள் டெர்மினல் மாயத்திரையில், பின்வரும் கட்டளைகளைத் தருக. sudo apt-get update && sudo apt-get install python3.

பின் அதில் python3 என்று எழுதி [enter] அழுத்துக. பிழை ஏதும் உள்ளதா என்று காண்க.

நிறுவப்பட்டுள்ள பைத்தான் பதிப்பை, பின்வரும் கட்டளை மூலம் அறியலாம்.

$ python3 -VPython 3.12.0

குறிப்பு: இங்கே $ என்பது கட்டளைகளை இயக்க காத்திருக்கும் ஷெல் குறியீடு ஆகும். உங்களுக்கு வேறு மாதிரி கூட இருக்கலாம்.

டெர்மினல் எனும் மாயத்திரை

Terminal, shell, command prompt, cmd, powershell, console, gnome-teminal, konsole என்று கடவுள் போல பல பெயர்களில் அழைக்கப்படும் கருப்புத் திரையே, இனி நமக்கு வீடு. இதில் தான், எல்லா பைத்தான் நிரல்களையும் இயக்கப் போகிறோம். இதுவரை உங்களுக்கு இந்தக் கருப்புத்திரை மீது ஏதேனும் பயம் உண்டு எனில், அதில் இருந்து வெளியே வர ஆவன செய்யுங்கள். நீச்சல் பழக, ஆற்றில் குதிப்பது போல, (ஆறு எங்கே இருக்கிறது? குளம், குட்டைதான் நமக்கு ஆறு) நீங்களும் பைத்தான் கற்க, பைத்தான் மட்டுமல்ல, கணினியை திறம்பட இயக்க, இந்த டெர்மினலை கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் பணிகள் அனைத்தையும் இதிலேயே செய்யுங்கள். எல்லாப் பணிகளுக்குமான command line கருவிகள் உள்ளன. அவற்றை நிறுவி, இயக்கி, பழகுங்கள்.

சில நாட்களில், இந்த மாயத்திரை, ஒரு அலாவுதீன் பூதமாக, நினைப்பதை எல்லாம் விரைவில் செய்து முடித்து, உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடுவதை உணர்வீர்கள்.

சிறந்த சமையல் கலைஞராக ஆக விரும்புகிறீர்கள் எனில், முதலில், வெந்நீர் வைப்பதில் இருந்து கற்க வேண்டும். பிறகே காபி, டீ என்று போய், சுவையான பிரியாணி செய்ய முடியும். இந்த டெர்மினல் என்பது டீ போடுவது போன்ற அடிப்படையான ஒரு திறன். அதற்கு பயந்தால், சுவையான பிரியாணி என்றும் கனவுதான்.

என்ன பார்த்தோம்?

உங்கள் கணினியில் பைத்தான் நிறுவுவது எப்படி என்று பார்த்தோம். இன்னும் அதில் ஏதேனும் சிக்கல் எனில், இணையத்தில் தேடுங்கள். பல முறை பலரும் பதில் எழுதியிருப்பர். அவற்றை பொறுமையாகப் படித்து, சிக்கல்களைத் தீர்த்து விடுங்கள். அல்லது stackoverflow, deepseek போன்ற தளங்களில் எழுதிக் கேளுங்கள். இணையத்தில் கேளுங்கள், கொடுக்கப்படும். எப்படியாவது பைத்தான் 3 ஐ நிறுவிவிட வேண்டும். அவ்வளவுதான்.

அடுத்து, நமது முதல் பைத்தான் நிரலை எழுதலாம்.

தம்பீ வா! நிரல் எழுத வா!
தங்கையே வா! நிரலைப் பகிர்வோம் வா!

– தொடரும்

த.சீனிவாசன் tshrinivasan@gmail.com

https://kaniyam.com/learn-python-in-tamil-2/

#PlainText #python #எளயதமழலபததன_ #பததன_